2023 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
2023 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தகைமைகள்
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் தமிழ் / சிங்கள மொழியில் “C” சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
க.பொ.த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களில் குறைந்தது 2C,1S என்ற அடிப்படையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
நுழைவுப் பரீட்சை
01.மொழித்திறன் (ஆங்கிலம் / தமிழ் / சிங்களம்) – 03 மணித்தியாலங்கள்
02. பொது அறிவு மற்றும் நுண்ணறிவு (ஆங்கிலம் / தமிழ் / சிங்களம்) – 2 மணித்தியாலங்கள்
(இரு பரீட்சை வினாத்தாள்களையும் இரு மொழிகளில் செய்ய வேண்டும். அது பற்றி அறிய கீழ் வரும் கட்டுரையை வாசியுங்கள்,)
தகைமைகள் பற்றி அறிய மற்றும் விண்ணப்பிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
சட்டக் கல்லூரி நுழைவுத் பரீட்சைக்கான தகைமைகள்
தற்போது 2023 ஆம் ஆண்டிற்கான, சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கான
விண்ணப்பங்கள் வெளியாகியிருக்கின்றன.
விண்ணப்பிப்பதுக்கான ஆகக் குறைந்த திறமைகள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 2C மற்றும் 1S சித்தியாவது பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் / சிங்களத்தில் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தது C சித்தி பெறப்பட்டிருத்தல் வேண்டும். தகைமைகள் தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை சட்டக் கல்லூரி இணையதளத்தில் சென்று பார்வையிடலாம்.
வினாப் பத்திரங்களின் கட்டமைப்பு
சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் இரு வினாப்பத்திரங்கள் காணப்படுகின்றன. முதலாவது மொழித்திறன் பகுதியாகும். இது மூன்று மணித்தியாலங்களை கொண்டது. இரண்டாவது வினாப்பத்திரம் 50 பொது அறிவு வினாக்களையும், 50 நுண்ணறிவு வினாக்களையும் உடையது. இது இரண்டு மணித்தியாலங்களை கொண்டது.
நீங்கள் இரு வினாப் பத்திரங்களையும் இரு மொழிகளில் செய்ய வேண்டும். ஒரு வினாப் பத்திரத்தை தமிழில்/ சிங்களத்தில் செய்தால், மற்றைய வினாப் பத்திரத்தை கண்டிப்பாக ஆங்கிலத்தில் செய்ய வேண்டும். உதாரணமாக மொழித்திறன் வினாப் பத்திரத்தை நீங்கள் தமிழ் அல்லது சிங்களத்தில் செய்தால், பொதுஅறிவு, நுண்ணறிவு வினாப் பத்திரத்தை ஆங்கிலத்தில் செய்ய வேண்டும்.
மொழித்திறன் வினாப் பத்திரத்தை ஆங்கிலத்தில் செய்தால், பொதுஅறிவு, நுண்ணறிவு வினாப்பத்திரத்தினை தமிழில் அல்லது சிங்களத்தில் செய்தாக வேண்டும். ஆகவே, எந்த வினாப் பத்திரத்தை எந்த மொழியில் செய்வது என்பது உங்களைப் பொறுத்ததாகும்.
சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையின் கடந்த கால வினாத்தாள்களை, சட்டக் கல்லூரி இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம். நுழைவுப் பரீட்சைக்காக, சற்று முயற்சியும், தியாகமும் செய்தால் அடுத்த ஆண்டு நீங்கள் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்து விடுவீர்கள்.
இலங்கையில் சட்டத்தரணி ஆவதற்கு ஏன் சட்டக் கல்லூரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது?
சட்டக் கல்வியை, சட்டக் கல்லூரியில் கற்பதற்கும் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கும் என்ன வித்தியாசம்? LLB மற்றும் Attorney at Law க்கு இடையிலான வித்தியாசம் என்ன? சட்டத்தரணியாவதற்கு இந்த இரண்டையும் செய்ய வேண்டுமா?
முதலில் சட்டபீடம் மற்றும் சட்டக் கல்லூரி இடையிலான வேறுபாட்டை நாம் அறிந்து கொள்வோம்.
சட்டக் கல்லூரி என்பது எந்த ஒரு பல்கலைக்கழகத் தொடர்பும் இல்லாத ஒரு சட்ட நிறுவனம் ஆகும். அது ஒருங்கிணைந்த சட்டக் கல்விப் பேரவை மூலம் நிர்வகிக்கப்படுகின்ற, ‘Attorney at Law – சட்டத்தரணி என்கின்ற தொழிற் தகைமையை (Professional Qualification) வழங்கக்கூடிய ஒரு சுயாதீன நிறுவனம் ஆகும்.
அதேநேரம் கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், ஜோன் கொத்தலாவ பல்கலைக்கழகத்தின் சட்ட பீடங்கள், சட்டத்துறையில் இளங்கலை பட்டத்தை (LLB) வழங்குகின்றன.
சட்டக் கல்லூரியானது, மூன்று வருட கற்கை நெறியை கொண்டது. மேலும் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் கீழ் தன்னார்வலராக ஆறு மாதங்கள் பணிபுரிந்து, இலங்கை உச்ச நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள முடியும்.
ஆனால் சட்ட பீடத்தில் கற்கும் ஒருவருக்கு தனது இளங்கலைப் பட்டத்தை பெறுவதற்கு நான்கு வருடங்கள் எடுக்கின்றன. அத்துடன் அவர் சட்டக் கல்லூரி இறுதி ஆண்டுப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். மேலும் ஆறு மாதங்கள் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் கீழ் தன்னார்வலராக பணிபுரிந்து, உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும்.
அதேநேரம், தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சட்டம் (LLB) கற்கின்ற மாணவர்கள் சட்டக் கல்லூரியின் மூன்று வருட பரீட்சையையும் எழுதியாக வேண்டும். அத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் கீழ் தன்னார்வலராக ஆறு மாதங்கள் பணிபுரிந்து, இலங்கை உச்ச நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளலாம்.
சட்டக் கல்வியை கற்பதற்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழிகளாக அமைகின்றன. ஆனால் அதற்கான தொழில் தகைமையைப் பெற சட்டக் கல்லூரிக்குள் நுழைந்தே ஆக வேண்டும்.
ஆகவே, ஒருவர் Attomey at Law எனும் தகைமையைப் பெற்றால் மாத்திரமே, இலங்கையில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள முடியும்.
இலங்கை சட்டக்கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
இலங்கை சட்டக் கல்லூரியானது, கொழும்பு – புதுக்கடையில், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) முன்பாக அமைந்துள்ளது. இலங்கையில் காணப்படும் ஒரே ஒரு சட்டக் கல்லூரியும் இதுவாகும்.
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வை நாம் எத்தனை வயதில் வேண்டுமானாலும் எழுதலாம். எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆகவே இது சட்டத்தரணியாக அனைவருக்கும் பொதுவான ஒரு வாய்ப்பாகும்.
ஆகவே நீங்கள் விரைவாக சட்டத்தரணி ஆவதற்கு, சட்டக் கல்லூரி ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சட்ட பீடம் கிடைக்காமல் போன மாணவர்கள், இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வை எழுத முயற்சியுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வை சுமார் 7000 க்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றார்கள். அதில் 250 பேர் மாத்திரமே சட்டக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுகிறார்கள். ஆகவே சிறந்த பயிற்சியும், தொடர் முயற்சியும் உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங்கள் சட்டக் கல்லூரிக்குள் நுழைய முடியும்.
More Informations